நடிகர் கமல்ஹாசன் கொரோனா விதியை மீறியதாக வெளியான தகவல்... தமிழக சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 14 நாட்கள் தனிமைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றதாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. அதைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்த கமல்ஹாசன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார். அவரை வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் கடந்த 1 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன் 3 ஆம் தேதி வரை ஓய்வில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், 4 ஆம் தேதி முதல் அவர் தனது அன்றாடப் பணிகளைத் துவங்கலாம் எனவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனால் கடந்த 4 ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங்கில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இல்லாமல் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் இதை ஜெ.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: “இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால், அவருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.
அவர் 14 நாட்கள் தனிமைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” இவ்வாறு அவர் கூறினார்.